இந்தியா

பச்சிளம் குழந்தையுடன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற பெண் எம்எல்ஏ

Published On 2022-12-19 10:59 GMT   |   Update On 2022-12-19 10:59 GMT
  • நான் ஒரு தாய், மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன்.
  • எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன்.

நாக்பூர்:

மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், உறுப்பினர்களுக்காக புதிய செயலி ஒன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நாசிக் மாவட்ட பகுதியை சேர்ந்தவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சரோஜ் ஆஹிர் என்பவர், பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது கைக்குழந்தையுடன் அவைக்கு வருகை தந்துள்ளார்.

இதுபற்றி ஆஹிர் கூறும்போது, நான் ஒரு தாய். மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். கொரோனா பெருந்தொற்றால் இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபை கூட்டத்தொடர் எதுவும் நடைபெறவில்லை.

நான் தற்போது தாயாகி இருக்கிறேன். ஆனால், எனக்கு வாக்களித்தவர்களுக்காக கேள்விகளை எழுப்பி பதில்களை பெறுவதற்காக நான் அவைக்கு வந்துள்ளேன் என அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தி பேசினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.வான சரோஜ் ஆஹிருக்கு கடந்த செப்டம்பர் 30-ந்தேதி குழந்தை பிறந்தது. அவையில் பங்கேற்பதற்கு முன்பு,  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார்.

Tags:    

Similar News