இந்தியா

25,000 ஆசிரியர்கள் பணிநியமனம் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கமாட்டேன், ஆனால்... மம்தா பானர்ஜி

Published On 2025-04-04 05:06 IST   |   Update On 2025-04-04 05:06:00 IST
  • கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
  • நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.

இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.

கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தரவேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என தெரிவித்தனர்.

மேலும், புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட்டும் சதி செய்துள்ளன என தெரிவித்தார்.

Tags:    

Similar News