இப்படியுமா இருப்பார்கள்?: தூங்கிய கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி
- தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
- மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.
பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.
சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.
நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.
மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.