இந்தியா

எம்.பி.யிடம் செயின் பறிப்பு: சட்டம்- ஒழுங்கு எங்கே? மத்திய அரசை சாடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள்..!

Published On 2025-08-04 18:45 IST   |   Update On 2025-08-04 18:45:00 IST
  • உள்துறை அமைச்சரின் கீழ் பெண் எம்.பி.க்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்பதை இது காட்டுகிறது.
  • Beti Bachao, Beti Padhao என்ன ஆனது? இது வெறும் முழக்கம் மட்டுமே.

டெல்லியில் நடைபயிற்சி சென்றபோது தமிழ்நாடு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள, உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த சாணக்யாபுரி பகுதியில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் தங்கச் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் செயினை பறித்துச் சென்றதாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் எம்.பி. சுதா புகாரளித்துள்ளார். அந்த புகாரில் தங்க செயின் பறிப்பு சம்பவத்தில் சுதா எம்பிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், சல்வார் கிழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த சாணக்யாபுரி பகுதியில் எம்.பி.யிடம் செயின் பறிக்கப்பட்ட நிலையில், சட்டம்- ஒழுங்கு எங்கே என மத்திய அரசை நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி இது தொடர்பாக கூறியதாவது:-

இது மிகவும் துரதிருஷ்டவசமானது. சாணக்யாபுரி போன்ற அதிக பாதுகாப்பு உள்ள இடத்தில், பகலில் எம்.பி.யின். செயின் பறிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு என்ன நடத்திருக்கும்?.

மத்திய அரசின் பொறுப்பு எங்கே?. இரட்டை என்ஜின் அரசின் வாக்குறுதிக்கு என்ன நிகழ்ந்தது?.

இவ்வாறு பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெபி மாதேர் "தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பில் நாம் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம்? ஒரு பெண் எம்.பி. தாக்கப்படுகிறார், அவரது உடைகள் கிழிக்கப்படுகின்றன, அவரது சங்கிலி பறிக்கப்படுகிறது. இவை அனைத்தும் தூதரகங்கள் நிறைந்த மிகவும் பாதுகாப்பான பகுதியில்.

உள்துறை அமைச்சரின் கீழ் பெண் எம்.பி.க்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்பதை இது காட்டுகிறது. Beti Bachao, Beti Padhao என்ன ஆனது? இது வெறும் முழக்கம் மட்டுமே" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பிரமோத் திவாரி "மோடி அரசின் கீழ் சட்டம்- ஒழுங்கு இல்லை என்பதை இது காட்டுகிறது. எம்.பி.க்கே இவ்வாறு நடந்தால், சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு பற்றி என்ன சொல்லப்படுகிறது?.

மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் "இது வெறும் தங்கச் செயின் பற்றியது கிடையாது. தமிழ்நாடு பவனுக்கு வெளியே பெண் எம்.பி. நடந்து செல்லும்போது இது நடந்துள்ளது. அவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் யாருக்கு பாதுகாப்பு இருக்கும்?. டெல்லி சட்டம்- ஒழுங்கிற்கு பதிலாக உள்துறை அமைச்சர் தேர்தல்கள் மற்றும் பீகாரில் வாக்காளர் முறைகேடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதில் பிசியாக உள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News