இந்தியா

ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார்? - கபில் சிபல் கேள்வி

Published On 2025-08-10 14:27 IST   |   Update On 2025-08-10 14:27:00 IST
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.
  • நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் எங்கிருக்கிறார் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார்.

ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளன்று எதிர்பாராத விதமாக பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

உடல்நலக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்ததாக அவர் கூறினார். இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து பேசிய கபில் சிபில், ராஜினாமா செய்த பின்னர் ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாள் நான் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவரது தனிப்பட்ட செயலாளர் தொலைபேசியை எடுத்து அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார். எனது அரசியல் சகாக்கள் பலர் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நான் 'லாபட்டா லேடீஸ்' படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் 'லாபட்டா குடியரசு துணைத் தலைவர்' பற்றி நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

தனது பதவிக் காலம் முழுவதும் அரசாங்கத்தை ஆதரித்த தன்கரைப் இப்போது எதிர்க்கட்சிகள்தான் பாதுகாக்க வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "அவருக்கு எங்காவது சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்ன பிரச்சனை? இதுபோன்ற விஷயங்களை மற்ற நாடுகளில் மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

உள்துறை அமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களிடம் நிறைய வளங்கள் உள்ளன. நீங்கள் வங்கதேசத்தினரை திருப்பி அனுப்புகிறீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எங்கள் துணை ஜனாதிபதி. எனவே அவர் இருக்கும் இடம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிடுங்கள்" என்று கபில் சிபல் கோரினார்.   

Tags:    

Similar News