இந்தியா

மந்திரி பார்த்தா சாட்டர்ஜியுடன் அர்பிதா முகர்ஜி

ஆசிரியர் நியமன ஊழல்: நடிகை வீட்டில் சிக்கிய ரூ.20 கோடி... மேற்கு வங்காள மந்திரி அதிரடி கைது

Published On 2022-07-23 07:44 GMT   |   Update On 2022-07-23 07:44 GMT
  • மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
  • இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

கொல்கத்தா:

மேற்குவங்காள ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

அந்த வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அர்பிதாவின் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

இதுஒருபுறமிருக்க தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை கொல்கத்தா பேங்ஷால் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதேபோல் விசாரணை வளையத்தில் உள்ள அர்பிதாவையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News