மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்போம் - பஹல்காம் தாக்குதல் பற்றி ஓவைசி
- இதில் காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
- பயங்கரவாதிகள் மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை நான் கண்டிக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் பாகிஸ்தான் இந்தியா இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரு நாடுகளும் முப்படைகளை தயார் நிலையில் வைத்துள்ளன.
இதற்கிடையே நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன்பின் மத்திய அரசின் எதிர் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தெரிவித்தன.
அந்த வகையில் கூட்டத்தில் கலந்துகொண்டபின் தங்கள் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்.
பாகிஸ்தானுக்கு எதிராக தற்காப்புக்காக வான்வழி மற்றும் கடற்படை முற்றுகையை மேற்கொள்ளவும், ஆயுத விற்பனையில் பாகிஸ்தானுக்கு தடைகளை விதிக்கவும் சர்வதேச சட்டம் அனுமதிக்கிறது. தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளியில் சிஆர்பிஎஃப் ஏன் நிறுத்தப்படவில்லை?. குழு அங்கு செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது ஏன்?
பயங்கரவாதிகள் மதத்தைக் கேட்டு மக்களைச் சுட்டுக் கொன்றனர். இதில் காஷ்மீரிகள் மற்றும் காஷ்மீர் மாணவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
பயங்கரவாதிகள் மதத்தைப் பற்றிக் கேட்டு மக்களைக் கொன்ற விதத்தை நான் கண்டிக்கிறேன். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் நல்லது, ஆனால் தண்ணீரை எங்கே வைத்திருப்போம்?. மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம். இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. என்று தெரிவித்தார்.