துணை ஜனாதிபதி தேர்தல் - அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்
- உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி இருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறினார்.
- புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கியது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த 21-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.
ஜனாதிபதியை முன் அனுமதி பெறாமல் திடீரென சந்தித்து அவர் பதவி விலகியது நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உருவாக்கியது. அவரது பதவி விலகலுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டது.
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய சொல்லி நீக்கப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.
ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகவே பதவி விலகி இருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறினார். என்றாலும் துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் முறைப்படி அறிவித்தது. இதுதொடர்பாக உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் கையெழுத்திட்ட அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மேலும், இது குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கியது.
துணை ஜனாதிபதி தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்தது. மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திரா மோடி தேர்தல் நடத்தும் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை இணைச் செயலாளராக கரீமா ஜெயின், மாநிலங்களவை இயக்குனர் விஜயகுமார் உதவி தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.