நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்- பினராயி விஜயன்
- போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்
- நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறுகையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வந்தது முழு திருப்தி அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட நடிகைக்கு கேரள அரசு ஆதரவாக உள்ளது. நடிகைக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி இருந்தது. இனியும் அது தொடரும் என்றார். அப்போது அவரிடம், ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் அடூர் பிரகாஷ் நடிகர் திலீப்புக்கு நீதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது ஜனநாயக முன்னணியின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். நடிகர் திலீப் மீது சதி திட்டம் தீட்டி குற்றம் சுமத்தப்பட்டதாக அடூர் பிரகாஷ் கூறியுள்ளார் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், போலீசார் சாட்சிகள், தடயங்கள் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணை குறித்து கருத்து கூற முடியாது. ஆனால், இந்த தீர்ப்பு திருப்தி அளிக்காததால், அதற்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் மாநில அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறினார்.