இந்தியா

Karur Stampede Case| டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்வி

Published On 2026-03-15 10:30 IST   |   Update On 2026-03-15 10:30:00 IST
  • 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி விஜய் மீண்டும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
  • விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் இந்த தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக்கழக தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.

பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் விஜய் பஸ்சில் நின்றபடி பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் பலியானார்கள்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகள் என்று தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சொல்லப்பட்டதால் போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பிறகு 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி விஜய் மீண்டும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 3-வது முறையாக டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் மார்ச் 10-ந்தேதி விசார ணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில், டெல்லிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், டெல்லிக்கு பதிலாக தமிழகத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணை நடத்துமாறும் விஜய் தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ. அதிகாரிகள் மார்ச் 15-ந்தேதி (இன்று) விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராவதற்காக விஜய் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து நேற்று பிற்பகலில் காரில் புறப்பட்ட விஜய் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விஜய் நேற்று மாலை தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

விஜய்யுடன் கட்சி நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட 7 பேர் உடன் சென்றனர். நேற்று இரவு டெல்லி சென்ற விஜய், இரவில் அங்குள்ள தாஜ் மான்சிங் ஓட்டலில் தங்கினார்.


இன்று காலையில் விஜய் ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு விஜய், சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பேசியது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் எங்கே குளறுபடி ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது.

நெரிசல் சம்பவம் நடந்த போது என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களையும் கேட்டதாக தெரிகிறது. மேலும் விசாரணையின் போது ஏற்கனவே கேட்கப்பட்ட கூடுதல் ஆவணங்களையும் விஜய் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில், விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் இந்த தொடர் விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விசாரணை இன்று மாலை வரை நீடிக்கலாம் என்றும், தேவைப்பட்டால் நாளையும் தொடர வாய்ப்பு உள்ளதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவை பொறுத்து விஜய் எப்போது சென்னை திரும்புவார் என்பது தெரியவரும்.

Tags:    

Similar News