பிரதமர் மோடியுடன் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யநாதெல்லா சந்திப்பு
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார்.
- டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்யநாதெல்லா இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக சத்ய நாதெல்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது எனபதிவிட்டுள்ளார்.
சத்யநாதெல்லாவை சந்தித்தது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்யநாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என தெரிவித்தார்.
ஏற்கனவே, ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.