இந்தியா

காங்கிரசார் வந்தே மாதரம் முழங்கி சிறை சென்றபோது நீங்கள் ஆங்கிலேயருக்கு வேலை செய்து கொண்டிருந்தீர்கள் - கார்கே

Published On 2025-12-10 00:17 IST   |   Update On 2025-12-10 00:17:00 IST
  • பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
  • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்

மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.

தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.

அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.

இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.

நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.

ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News