இந்தியா

சித்தராமையா தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டம்

கர்நாடகா சட்டசபையில் வீர சாவர்க்கர் படம் திறப்பு: காங்கிரஸ் போராட்டம்- பாஜக கேள்வி

Published On 2022-12-19 06:52 GMT   |   Update On 2022-12-19 09:33 GMT
  • சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல.
  • சாவர்க்கரின் படத்தை வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும்?

பெங்களூரு:

கர்நாடகா சட்டசபையில் பசவண்ணா, வால்மீகி, கனகதாசா, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களை வைக்க, சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து வீர சாவர்க்கரின் படத்தையும் சேர்த்து 6 தலைவர்களின் படங்களை பாஜக அரசு சட்டசபையில் வைத்துள்ளது.

இந்நிலையில் சாவர்க்கரின் படம் கர்நாடகா சட்டசபையில் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா தலைமையில் சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை நடவடிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று பாஜக விரும்புவதாக கூறினார். 


அதனால்தான் அவர்கள் சாவர்க்கரின் உருவப்படத்தை சட்டசபை அரங்கில் நிறுவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக அரசுக்கு எதிராக ஊழல் பிரச்சினைகளை சட்டசபையில் நாங்கள் எழுப்ப போகிறோம் என்பதால் அவர்கள் இந்த புகைப்படத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசாரின் பங்கு மற்றும் தியாகங்கள் பற்றி அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள், ஆனால் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசும் தற்போது இருக்கும் காங்கிரசும் ஒன்றல்ல, இப்போது இருப்பது டூப்ளிகேட் காங்கிரஸ் என்று குறிப்பிட்டார். 


அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவர் கூறினார். சாவர்க்கரின் படத்தை சட்டசபையில் வைக்காமல், தாவூத் இப்ராகிம் படத்தையா வைக்க வேண்டும் என்பது குறித்து சித்தராமையாவிடம் கேட்குமாறும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News