இன்ஸ்டாகிராம் உதவியால் மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த போலீசார்
- மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.
- மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் "குட்பை ஸாரி அம்மா அப்பா" என்று பதிவிட்டு இருந்தார். 16-ந்தேதி இரவில் 7.42 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த பதிவு குறித்து, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு, தொழில்நுட்ப முறையில் எச்சரிக்கை அறிவிப்பு சென்றது. உடனே அந்த நிறுவனம், அந்த பதிவு குறித்து மாநில போலீஸ் தலைமையகத்துக்கு தகவலை பரிமாற்றம் செய்து தற்கொலை முயற்சியை தடுக்க எச்சரிக்கை செய்தது.
தகவல் கிடைத்ததும் போலீஸ் டிஜி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவலை கடத்தி இளம்பெண்ணின் தற்கொலை முயற்சியை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
தகவல் வந்த 8 நிமிடங்களில் மில் பகுதி போலீஸ் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டை சென்றடைந்தனர். உடனே அந்த மாணவியின் பெற்றோரிடம் பேசிய போலீசார், மாணவிக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கினர்.
"மாணவியும், அவரது பெற்றோரும் இந்த விஷயத்தில் அமைதி காப்பதாகவும் சுமூக முடிவு எடுப்பதாகவும் தெரிவித்தனர். மாணவியின் தற்கொலை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது" என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 12-ந் தேதி டியோரியா மாவட்டத்தில் ஒரு வாலிபரின் தற்கொலை முயற்சி இதே பாணியில் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.