மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை உயிரிழப்பு.. ஜோத்பூரில் உடல் தகனம்
- லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் ஆவார்.
- ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
ராஜஸ்தான்: மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை டவு லால் வைஷ்ணவ், வயது மூப்பு காரணமாக இன்று காலை (செவ்வாய்க்கிழமை) காலமானார்.
அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு, ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 11:52 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலி மாவட்டத்தில் உள்ள ஜீவன்ட் கலா கிராமத்தைச் சேர்ந்த டவு லால் வைஷ்ணவ், பின்னர் ஜோத்பூரில் குடியேறி வழக்கறிஞராகவும், வரி ஆலோசகராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
அவர் தனது சொந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராகவும் பணியாற்றி உள்ளார். லால் வைஷ்ணவ் - சரஸ்வதி வைஷ்ணவ் இணையருக்கு மூத்த மகன் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் இளைய மகன் ஆனந்த் வைஷ்ணவ் ஆவர்.
இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஜோத்பூர், காகாவில் உள்ள வைஷ்ணவ் சமாஜ் மயானத்தில் நடைபெற்றன. இதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் ராஜஸ்தான் சபாநாயகர் வாசுதேவ் தேவ்நானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.