இந்தியா

உண்மையை மறைத்து தவறான வேலையின்மை விகிதத்தை வெளியிட்ட மத்திய அரசு? - Reuters வெளியிட்ட அதிர்ச்சி ஆய்வு!

Published On 2025-07-23 04:00 IST   |   Update On 2025-07-23 04:00:00 IST
  • தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
  • ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கும், நிதர்சனமான உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுயாதீன பொருளாதார வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசின் 5.6% வேலையின்மை விகிதம் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என 50 பொருளாதார வல்லுநர்களில் 37 பேர் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் வேலை செய்பவரை வேலை உள்ளவராகக் கருதும் அரசின் வரையறை, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலையின்மையின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் சிலரின் செல்வம் வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது.

ஆனால் தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அறிகுறி அல்ல என்று அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் கூறுகிறார்.

பிற G20 நாடுகளைப் போல இந்திய பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கேற்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையே இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், வேலையின்மை இந்தியாவின் மிகப்பெரிய சவால் என்றும், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

Tags:    

Similar News