வில், அம்பு சின்னத்தை சிவசேனாவிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது: உத்தவ் தாக்கரே
- மக்கள் ஓட்டு போடும் போது கட்சியின் சின்னத்தை மட்டும் பார்ப்பது இல்லை.
- ஒன்று, 50 அல்லது 100 எம்.எல்.ஏ.க்கள் சென்றால் கூட கட்சி அழியாது.
மும்பை :
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பினார். மேலும் அவர் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பா.ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றி உள்ளார்.
கடந்த 30-ந் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாகவும், பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதில் கடந்த புதன்கிழமை ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த குலாப்ராவ் பாட்டீல் எம்.எல்.ஏ. சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை பயன்படுத்த அவர்களுக்கு தான் உரிமை உள்ளது என கூறினார்.
இந்தநிலையில் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பை மாதோஸ்ரீயில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டத்தின்படி யாராலும் சிவசேனாவின் வில், அம்பு சின்னத்தை பறிக்க முடியாது. சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்த பிறகு தான் நான் இதை கூறுகிறேன். மக்கள் ஓட்டு போடும் போது கட்சியின் சின்னத்தை மட்டும் பார்ப்பது இல்லை.
வேட்பாளர் யார், அவர் சிவசேனாவை சேர்ந்தவரா என்று தான் பார்ப்பார்கள். சிவசேனா கட்சி வேறு. சட்டசபை கட்சிக்கு வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன. ஒன்று, 50 அல்லது 100 எம்.எல்.ஏ.க்கள் சென்றால் கூட கட்சி அழியாது. சட்டசபை கட்சி, பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன. யாராலும் கட்சியின் தொண்டர்களை அவர்களுடன் எடுத்து செல்ல முடியாது.
எனது தலைமையிலான அரசு கவிழ மக்கள் தான் அனுமதிக்க வேண்டும். இடைத்தேர்தலை நடத்த வேண்டும். நாங்கள் தவறு செய்தால், மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். எனவே உங்களுக்கு தைரியம் இருந்தால் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெறுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல சிவேசனா அதிருப்தி அணியினர் மீண்டும் கட்சியுடன் இணைய பா.ஜனதாவுடன் உத்தவ் தாக்கரே பேச வேண்டும் என அவர்கள் கூறியது குறித்து உத்தவ் தாக்கரே பேசுகையில், "கடந்த 2½ ஆண்டுகளாக பா.ஜனதா எங்கள் குடும்பத்தையும், என்னையும் அவதூறாக பேசிய போது நீங்கள் (அதிருப்தி அணி) அமைதியாக இருந்தீர்கள்.
நீங்கள் பா.ஜனதாவுடன் தொடர்பில் இருந்து சொந்த கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். நீங்கள் என் மீதும், எனது குடும்பம் மீதும் வைத்திருந்த பாசம் நிஜம் தானா என தோன்றுகிறது. தாக்கரே குடும்பத்தை மோசமாக விமர்சித்தவர்கள் அருகில் நீங்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அவர்களை கட்டி அணைக்கிறீர்கள். அவர்கள் எனது மகனின் வாழ்க்கையை சீரழிக்க முயற்சி செய்தவர்கள்.
எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சிவசேனாவுக்கு மட்டுமல்ல, ஐனநாயகம் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதையும் தீர்மானிக்க உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கூற உள்ளது என்பதை நாடே பார்த்து கொண்டு இருக்கிறது.
ஏனெனில் அந்த தீர்ப்பு நாட்டில் வருங்காலத்தில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கும் என்பதை காட்ட உள்ளது. அந்த தீர்ப்பின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தின் 4 தூண்களும் சரியாக அதன் வேலையை செய்கிறார்களா என்பதையும் காட்டும். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.