அறுந்து விழுந்த சிமெண்ட் தூண்.
திருப்பதியில் மேம்பால பணியின்போது தூண் விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.800 கோடி மதிப்பில் திருச்சானூரிலிருந்து அலிபிரி வரை பறக்கும் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
- திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் மீது கிரேன் மூலம் 50 டன் எடை கொண்ட சிமெண்ட் தூண் பொருத்தும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
திருப்பதி:
திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பறக்கும் சாலை திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.800 கோடி மதிப்பில் திருச்சானூரிலிருந்து அலிபிரி வரை பறக்கும் சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது.
அதன்படி மத்திய அரசு சார்பில் ரூ.400 கோடியும், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.200 கோடியும், திருப்பதி மாநகராட்சி சார்பில் ரூ.200 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டு கருடா வாராவதி என்ற பெயரில் பணிகள் தொடங்கப்பட்டன.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி சீனிவாச சேது என்ற பெயரில் திட்டத்தை மாற்றினார். தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் மீது கிரேன் மூலம் 50 டன் எடை கொண்ட சிமெண்ட் தூண் பொருத்தும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் பெல்ட் அறுந்து வேலை செய்துகொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது சிமெண்ட் தூண் விழுந்தது.
இதில் உடல் நசுங்கி மேற்கு வங்கத்தை சேர்ந்த அபிஜித் கோஷ் (வயது 20), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த படா மண்டல் (44) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.