சிந்து பகுதி நாளை இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங்
- பல ஆண்டாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர் என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.
குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான இந்து சமூக மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை.
ஆனால் அந்த வலியை யாராவது புரிந்து கொண்டனர் என்றால், அது பிரதமர் மோடி தான். அதனால் தான் குடியரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிந்து பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
சிந்துவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என தெரிவித்தார்.