SIR-க்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் பிரசாரம்: கொல்கத்தாவில் மெகா பேரணிக்கு திட்டம்
- லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என அச்சம்.
- மம்தா பானர்ஜி பேரணியில் உரையாற்றுவார் எனத் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.
SIR எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த வருடம் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையை கடுமையான எதிர்க்கின்றன.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த மாதம் SIR-க்கு எதிராக கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. பேரணி இறுதியில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் உரையாற்ற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தீபாவளியைத் தொடர்ந்து காளி பூஜை, பாய் தூஜ் பண்டிகை வரவிருக்கிறது. இந்த பண்டிகைகள் முடிவடைந்த பின்னர், இந்த பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.