இந்தியா

கம்பி வேலியில் சிக்கிய புலி: பாதுகாப்பாக மீட்க வனத்துறையினர் தீவிரம்

Published On 2024-02-13 09:42 GMT   |   Update On 2024-02-13 09:42 GMT
  • கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது.
  • கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

அங்குள்ள மானந்தவாடி பகுதியில் புகுந்த ரேடியோ காலர் பொருத்தப்பட்ட காட்டுயானை ஒன்று சிக்கிய நிலையில், மையம்பள்ளியை சேர்ந்த அஜிஷ் என்பவர் நேற்றுமுன்தினம் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த யானையும் ரேடியோ காலர் பொருத்திய யானை என்பது கண்டறியப்பட்டது.

வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு சென்று அஜிசை காட்டு யானை கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். யானை தாக்கி பலியான ஜிசின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்தது.

வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கவும், அஜிசை கொன்ற யானையை பிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதினார்.

இந்நிலையில் கண்ணூர் கோட்டியூர் பன்னியமலை பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியில் இன்று புலி ஒன்று சிக்கியது. அதனை தொழிலாளி ஒருவர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த புலியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் புலியை அமைதிப்படுத்தி மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News