1971 போர் நிலைமை வேறு.. இப்போது உள்ள சூழ்நிலை வேறு.. சொல்கிறார் சசி தரூர்!
- டிரம்ப் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
- மோதலை மேலும் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டுக டிரம்ப் தலையீடு பிரதமர் மோடியின் பலவீனத்தை குறிப்பதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ், 1971 இல் இந்திரா காந்தி இந்தோ - பாக் போரை கையாண்ட விதம் குறித்து பதிவுகளை பகிர்ந்து வருகிறது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், இந்த விவகாரத்தில் டிரம்ப் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இந்த ஒப்பீடு குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஒரு இந்திய குடிமகனாக, 1971 இல் இந்திரா காந்தியின் செயல்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்போதைய நிலைமை 1971-ல் இருந்து வேறுபட்டது. வங்கதேசம் சுதந்திரத்திற்காக தார்மீகப் போராட்டத்தை நடத்திய நாள் அது.
வங்கதேசத்தை விடுவிப்பது இந்தியாவின் தெளிவான இலக்காக இருந்தது. இன்றைய போராட்டத்தின் குறிக்கோள், பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்பியவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதாகும். அதற்கான விலையை அவர்கள் கொடுத்தால் போதும். அந்தப் பாடம் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. மோதலை மேலும் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.