இந்தியா

தனியார் நிறுவனங்களிடம் ரூ. 4,087 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்கத் தவறிய ரெயில்வே - CAG அறிக்கை

Published On 2025-12-21 10:21 IST   |   Update On 2025-12-21 10:23:00 IST
  • மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது
  • போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்திய ரயில்வேக்கு வரவேண்டிய சுமார் 4,087 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூலக்கப்படவில்லை என்று மத்திய கணக்குத் தணிக்கையாளர் (CAG) அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

மொத்தம் 269 வழக்குகளில் இந்தத் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது.

மேலும், இந்திய ரயில்வேயிடம் தற்போது 4.88 லட்சம் ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 62,740 ஹெக்டேர் நிலம் காலியாகவே கிடக்கிறது.

இந்த நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்ட 'ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்திடம்' (RLDA) வெறும் 1.6% நிலம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களிலும் கூட, நில உரிமை தொடர்பான சிக்கல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாகப் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை.

போதிய கண்காணிப்பு இல்லாதது மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த வருவாய் இழப்புக்கு மிக முக்கியக் காரணம் என்று சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் ரயில் டிக்கெட் கட்டணங்கள் தவிர்த்து, நிலங்களை மேம்படுத்துவதன் மூலம் ஈட்ட வேண்டிய டிக்கெட் சாரா வருவாயில் இந்திய ரயில்வே மிகவும் பின்தங்கியிருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.   

Tags:    

Similar News