சமூக ஒற்றுமைக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்பட வேண்டும்- பவன் கல்யாண்
- மக்களுக்கு நன்மை பயக்க வலுவான தலைமை தேவை.
- திராவிட நிலம் பல தனித்துவமான அம்சங்களின் தொகுப்பாகும்.
திருப்பதி:
எம்.ஜி.ஆரின் பேரன் சத்திய ராஜேந்திரன் பல்வேறு பொது அமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய குழுவினர் ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணை சந்தித்தனர்.
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாக நிலைமை அந்த மாநில மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றை தீர்ப்பதற்கான வழிகள், கலாசாரம், மதத்தை பாதுகாத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
இந்த நிகழ்வில் பவன் கல்யாண் பேசியதாவது;-
தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகள் என் பார்வையில் உள்ளன. அவற்றை தீர்ப்பதில் ஜனசேனா தனது பங்களிப்பை வழங்கும். மக்களுக்கு நன்மை பயக்க வலுவான தலைமை தேவை. அப்போதுதான் மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள். ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் நமது திறன்களை அங்கீகரித்துள்ளது. அதற்குக் காரணம் நாட்டின் வலுவான தலைமை. சமூகத்தில் ஒற்றுமை இருக்கும்போதுதான் வளர்ச்சி சாத்தியமாகும். முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சட்டம் ஒழுங்கு பன்முகத்தன்மையில் ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்தனர்.
பொதுப்பிரச்சினைகளை தீர்ப்பதில் அந்த உணர்வு தொடர வேண்டும். திராவிட நிலம் பல தனித்துவமான அம்சங்களின் தொகுப்பாகும். எந்த மாநிலத்திலும் நிலையான தலைமையை நீங்கள் விரும்பினால், தேர்தல்களில் வாக்குகள் சிதறுவதை தடுப்பது முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்கால அரசியலில் ஒரு வலுவான கூட்டணி தேவை .
இவ்வாறு அவர் கூறினார்.