ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்த உத்தரவை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
- குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார்.
- இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு இழுத்தடித்ததால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகார மீறலை கண்டித்து மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.
மேலும் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் 3 மாத காலக்கெடுவை விதித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார். இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
அதில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்தில் தலையிட்டால் அரசியலமைப்பில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நடைபெற்றது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஆலோசனை கோரியுள்ளார். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க பயன்படுத்தப்படக்கூடாது என தமிழகம் மற்றும் கேரளா அரசுகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அப்போது பேசிய பி.ஆர்.கவாய், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 அன்று அளித்த உத்தரவை மாற்றியமைக்காது.
ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்பதை ஒரு மேல்முறையீடாக கருத மாட்டோம். நீதிமன்றம் ஆலோசனை வழங்கும் பணியில் மட்டுமே ஈடுபடும்" என்று தெரிவித்தார்.