இந்தியா

கேரளாவில் தொடரும் சோகம்: சிறுமியை கடித்து குதறிய நாய்கள்

Published On 2023-06-20 04:42 GMT   |   Update On 2023-06-20 04:42 GMT
  • சிறுமி ஜான்வி அலறியபோது, மேலும் 2 நாய்கள் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை கடித்தன.
  • பெற்றோர் மீட்டு கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தெரு நாய்கள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இதில் குறிப்பாக கண்ணூர் மாவட்டம் முழப்பிலாங்காட்டில் கடந்த 11-ந்தேதி தெரு நாய்கள் கடித்து குதறியதில் அந்த பகுதியை சேர்ந்த நவுஷாத்-நுசீபா தம்பதியரின் மகன் நிஹால் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

ஆனால் அது முழுமை பெறாததால், நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

இதனால் வீதிக்கு வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் தெருநாய்களின் தாக்குதலில் மேலும் ஒரு மாணவர் மற்றும் மாணவி பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

முழப்பிலாங்காடு அருகே உள்ள பச்சக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி ஜான்வி (வயது 9). 3-ம் வகுப்பு மாணவியான இவர் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த தெருநாய் அவரை கடித்தது. சிறுமி ஜான்வி அலறியபோது, மேலும் 2 நாய்கள் அங்கு வந்து சிறுமியின் கை, கால்களை கடித்தன.

ஜான்வியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. நாய்கள் கடித்ததில் பலத்த காயம் அடைந்த சிறுமி ஜான்வியை பெற்றோர் மீட்டு கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியை நாய்கள் கடித்ததை பார்த்தவர்கள், தெருநாய்கள் சிறுமியை கடித்து இழுத்துச் செல்ல முயன்றதாக தெரிவித்தனர். இதற்கிடையில் கொல்லம், சத்தினம்குளத்தில் மற்றொரு சம்பவமாக தெருநாய்கள் கடித்ததில் 10-ம் வகுப்பு மாணவர் ஆதில் என்பவர் காயமடைந்து உள்ளார். அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News