பணி ஓய்வுக்கு முன் கடைசி பயணம்.. குடும்பத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - ரெயில் ஓட்டுனருக்கு நேர்ந்த கதி
- அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர்.
ஜார்கண்டில் சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர். ரெயில்வே லைனில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 2 சரக்கு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், ரெயில்களின் ஓட்டுநர்கள் 2 பேர் உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 5 ரெயில்வே பணியாளர்கள், 4 CISF வீரர்கள் காயமடைந்தனர்.
தகவலின்படி, ஆலைகளுக்காக தனியாரால் இயக்கப்படும் ரெயில்வே தடத்தில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயிலானது, பார்ஹத் எம்.டி. ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காலியான மற்றொரு சரக்கு ரெயில் மீது அதிவேகத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இரண்டு ரெயில்களுக்கு இடையேயான சிக்னல் தொடர்பு சரிவர பராமரிக்கப்படாததே விபத்திற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த நிலக்கரி ஏற்றிவந்த ரெயிலின் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் நேற்றைய தினத்துடன் ஓய்வு பெற இருந்தார். மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால்.
நேற்று ஓய்வு பெறுவதற்கு முன் தனது கடைசி பயணத்தின்போதுதான் இந்த துயர சம்பவம் அவருக்கு நேர்ந்திருக்கிறது. நேற்று அந்த பயணம் முடிந்த பின் இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார்.
அவரது மனைவி, மகன் மற்றும் மகள் விருந்து ஏற்பாடு செய்துவிட்டு அவருக்காக காத்திருந்துள்ளனர். கடைசியாக தான் சீக்கிரம் வந்து விருந்தில் கலந்துகொள்வேன் என அவர் போனில் கூறியிருக்கிறார்.
ஆனால் அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்திதான் அவரது குடும்பத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறது. இறந்த கங்கேஸ்வர் மால் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களின் மொத்த உலகமும் நொறுங்கிவிட்டது என கங்கேஸ்வர் மாலின் மகள் துயரத்துடன் தெரிவிக்கிறார்.