இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை - 9 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

Published On 2023-07-23 12:24 GMT   |   Update On 2023-07-23 12:24 GMT
  • ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
  • சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டது.

பாட்னா:

பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வெட்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை தவறி விழுந்தது. இதைக் கண்ட தாயார் அதிர்ச்சி அடைந்து கிராமத்தினரை அழைத்துள்ளார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். குழந்தை ஆழ்துளை கிணற்றில் 60 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 60 ஆடி ஆழத்தில் சிக்கியிருந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சுமார் 9 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News