இந்தியா

ஆந்திராவில் நாளை எம்.எல்.சி தேர்தல்: வாக்காளர்களுக்கு வினியோகிக்க வெள்ளி கட்டிகள் பதுக்கல்- தெலுங்கு தேசம் கட்சியினர் முற்றுகை

Published On 2023-03-12 06:26 GMT   |   Update On 2023-03-12 06:26 GMT
  • தெலுங்கு தேசம் கட்சியினர் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
  • அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே 15 கிராம் எடையுள்ள வெள்ளிக்கட்டிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் எடுத்துச் சென்றதாக நாடாளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் நாளை எம்.எல்.சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசாகப்பட்டினம் கடற்கரை சாலையில் மெஜஸ்டிக் டவரில் உள்ள 101-வது பிளாட்டில் மூட்டை மூட்டையாக ஆயிரக்கணக்கில் வெள்ளி கட்டிகள் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் எழுந்தது.

இந்த பிளாட் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.சி வேட்பாளர் சீதம் ராஜு சுதாகரின் அலுவலகம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பரவியதால் நேற்று மாலை 6 மணி அளவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் செய்தனர். ஆனால் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் போலீசார் சுமார் 5 மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால் அவர்கள் அலுவலகத்தில் உள்ளே செல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்தனர். இதனால் அதிகாரிகள் மீது தெலுங்கு தேசம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தெலுங்கு தேசம் முன்னாள் எம்எல்ஏ காந்தி பாஜு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் அலுவலகத்துக்கு வெளியே குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் மீண்டும் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இதையடுத்து இரவு 10.30 மணிக்கு ஆய்வுக்குழுவினர் வந்து அலுவலகத்திற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு வெறும் துண்டு பிரசுரங்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே 15 கிராம் எடையுள்ள வெள்ளிக்கட்டிகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் எடுத்துச் சென்றதாக நாடாளுமன்ற தொகுதி தலைவர் சீனிவாச ராவ் குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News