இந்தியா

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு தடை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

Published On 2022-07-06 09:35 GMT   |   Update On 2022-07-06 11:01 GMT
  • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
  • இதன் மூலம் நாளை நடைபெற இருந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2 நீதிபதிகள் அளித்த உத்தரவுக்கு எதிராக அவைத் தலைவரை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இது கோர்ட்டு அவமதிப்பு என்றும், சட்ட விரோதமாக பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த வழக்கு விசாரணை நாளை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஒரு கட்சியின் உள்கட்சி விவகாரத்தில் கோர்ட்டு ஒரு எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்றும், பொதுக்குழு விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு உத்தரவு பிறப்பித்தது கட்சியின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.

எனவே இதில் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. நாளை நடைபெற உள்ள அவமதிப்பு வழக்குக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாளை நடைபெற இருந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பொதுக்குழுவில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமாகும் என்றும் இது எப்படி கோர்ட்டு அவமதிப்பாகும் என்றும் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 2 நீதிபதிகள், பொதுக்குழு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News