இந்தியா

குறைந்த மதிப்பெண் வழங்கியதால் ஆத்திரம்- ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்கள்

Published On 2022-08-31 10:38 GMT   |   Update On 2022-08-31 10:39 GMT
  • ஜார்கண்ட் கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.
  • மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தின் கோபிகந்தர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு நடத்தும் பழங்குடியினர் குடியிருப்புப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

இதில் 9ம் வகுப்பில் படிக்கும் 32 மாணவர்களில் 11 பேர் தோல்விக்கு சமமாக கருதப்படும் டிடி கிரேடு பெற்றுள்ளனர். 9ம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக கூறி கணித ஆசிரியர் சுமன் குமார் மற்றும் கிளெர்க் சோன்ராம் சவுரே ஆகியோரை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வழங்கப்படாததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதுகுறித்து கோபிகாந்தர் காவல் நிலைய பொறுப்பாளர் நித்யானந்த் போக்தா கூறுகையில், " சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் எழுத்துப்பூர்வ புகார் எதுவும் கொடுக்காததால், இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. சம்பவத்தை சரிபார்த்த பிறகு, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன், ஆனால் அது மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் என்று கூறி மறுத்துவிட்டது" என்றார்.

Tags:    

Similar News