இந்தியா

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து சோனியா மேல்-சபைக்கு தேர்வாகிறார்... விரைவில் வேட்புமனு தாக்கல்

Published On 2024-02-12 03:49 GMT   |   Update On 2024-02-12 03:49 GMT
  • சோனியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
  • சோனியாவை போல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மேல்-சபை எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மேல்-சபையான மாநிலங்களவைக்கு எம்.பி.க்களை தேர்வு செய்ய பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து எம்.பி.க்களை தேர்வு செய்வார்கள். இந்த எம்.பி. தேர்தலுக்கான மனு தாக்கல் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 15-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

மாநிலங்களவை தேர்தலை சந்திக்கும் வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளர்களை அறிவிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் 10 மேல்-சபை எம்.பி.க்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதற்கிடையே தற்போதைய மேல்-சபை தேர்தல் மூலம் சோனியா காந்தியை மேல்-சபை எம்.பி.யாக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினார்கள்.

இதையடுத்து சோனியா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேல்-சபை எம்.பி.யாக அவர் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசத்தில் இருந்து அவர் மேல்-சபைக்கு தேர்வாக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோனியாவை போல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மேல்-சபை எம்.பி.யாக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான் தெலுங்கானாவில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மனுசிங்வி ராஜஸ்தானில் போட்டியிட உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் இருந்து மேல்-சபைக்கு தேர்வாக கமல்நாத் ஆதரவு திரட்டி வருகிறார்.

Tags:    

Similar News