இந்தியா

சித்தராமையா, டி.கே.சிவகுமார் கடந்து வந்த அரசியல் பாதை

Published On 2023-05-14 10:31 GMT   |   Update On 2023-05-14 10:31 GMT
  • 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
  • 2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது.

பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இருவருமே கடுமையாக உழைத்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்து வெற்றியின் பாதைக்கு கொண்டு சென்ற பெருமை இவர்கள் இருவருக்கும் உண்டு.

கர்நாடக காங்கிரசில் இருபெரும் தலைவர்களாக இருக்கும் சித்தராமையா, டி.கே.சிவகுமார் ஆகியோர் அரசியலில் கடந்து வந்த பாதை வருமாறு:-

கர்நாடகாவில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்ட குருபா ஜாதியை சேர்ந்தவர் சித்தராமையா. இவர் ஆரம்பத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது சித்தராமையா மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னணி தலைவராக இருந்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

ஆனால் கூட்டணி ஆட்சியின்போது தனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு முதல் மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார்.

மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சித்தராமையா அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் 2006-ம் ஆண்டு சித்தராமையா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தனது செல்வாக்கை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியில் முக்கிய இடத்துக்கு வந்தார்.

2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சி அமைத்தபோது காங்கிரஸ் சார்பில் சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 8 ஆண்டு காலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை இழந்திருந்தது. காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அக்கட்சி தலைவர்களுடன் சித்தராமையாவும் கடுமையாக உழைத்தார். அவரது உழைப்பின் பலனாக 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது.

இதனால் சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. 5 ஆண்டு காலம் அவரது ஆட்சி நீடித்தது.

அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. ஆனாலும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது. கூட்டணி அரசில் சித்தராமையாவுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஆனாலும் இரு கட்சிகளின் முன்னணி தலைவர்கள் அங்கம் வகிக்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா பணியாற்றினார்.

2019-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. அப்போது சித்தராமையாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா திறம்பட பணியாற்றினார். பா.ஜனதா ஆட்சியின் முறைகேடுகளை சட்டசபையிலும், மக்கள் மத்தியிலும் சித்தராமையா பகிரங்கப்படுத்தினார்.

பா.ஜனதாவின் கொள்கைகளை அவர் துணிவுடன் எதிர்த்தார். இதையடுத்து அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இது காங்கிரசின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

மேலும் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தின்போது இது தனது கடைசி தேர்தல் என்று கூறி இருந்தார். எனவே தனக்கு மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சித்தராமையா காத்திருக்கிறார்.

டி.கே.சிவகுமார்

கர்நாடகாவில் 2-வது பெரிய சமூகமான ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர் டி.கே.சிவகுமார். இவர் சித்தராமையாவுக்கு துணையாக இருந்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தினார். இவர் மாணவ பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவராக வளர்ந்து வந்தார். 1989-ம் ஆண்டு முதல் சாந்தனூர், கனகபுரா தொகுதிகளில் தொடர்ந்து 8 முறை வெற்றி பெற்றுள்ளார். இவர் நேரு குடும்பத்தின் செல்லப் பிள்ளையாகவும் விளங்கி வருகிறார்.

டி.கே.சிவகுமார் அரசியலில் ராஜீவ் காந்தியால் அடையாளம் காட்டப்பட்டு சோனியா காந்தியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் பதவியில் இருந்தபோது 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் அதற்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து 2020-ம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் பலம் கொண்ட கட்சியாக மாற்ற டி.கே.சிவகுமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பா.ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் விலைவாசி உயர்வை கண்டித்தும், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டார்.

பா.ஜனதா கட்சியின் குறைபாடுகளை மக்கள் மத்தியில் சுட்டிக்காட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இதன்மூலம் கர்நாடகாவில் சரிந்து கிடந்த காங்கிரசின் செல்வாக்கை மீட்டெடுத்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியானது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

எனவே முதல்-மந்திரி பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் டி.கே.சிவகுமார் காத்திருக்கிறார்.

Tags:    

Similar News