அமெரிக்காவிலிருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல் - மாநிலங்களவையில் ஜெய்சங்கர் தகவல்
- 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
- இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.
2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.