போர் பதற்றம் நிலவும் நிலையில் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியம்- மோடி
- நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.
- வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று மிகவும் புனிதமான நாள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னல் அம்பேத்கருக்கு இன்று பிறந்தநாள். இந்த சிறப்பான நாளில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கும் வகையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படடுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.
வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தமானில் சுற்றுலா மேம்படுத்தப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படும்.
தற்போது உலகம் முழுவதும் போர் பதற்றம் சூழ்நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் வலுவான அரசு அமைய வேண்டியது அவசியமாகும். மத்தியில் வலுவான அரசு அமைந்தால்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக வாழ முடியும்.
அது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். அதற்கு மக்கள் மத்தியில் வலுவான அரசை மீண்டும் உருவாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.