இந்தியா

மூடநம்பிக்கையால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வர மறுக்கும் கர்ப்பிணிகள்

Published On 2024-01-13 05:30 GMT   |   Update On 2024-01-13 09:26 GMT
  • பிரசவ அறையுடன் ஒரே மாடி கொண்ட அரசு ஆரம்ப மருத்துவமனை கட்டப்பட்டது.
  • கிராம மக்கள் பிரசவங்களுக்கு இந்த மருத்துவமனையை விரும்புவதில்லை.

பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரிவில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பீதார் மாவட்டத்தின் பகடல் கிராமம்.

சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தை சுற்றியுள்ள 20 கிராமங்கள் பயன்பெறும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முழு வசதியுடன் கூடிய பிரசவ அறையுடன் ஒரே மாடி கொண்ட அரசு ஆரம்ப மருத்துவமனை கட்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த மருத்துவனையில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.

இதற்கு காரணம் இம்மருத்துவமனை கட்டிடமானது கல்லறைக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளதாகும்.

கல்லறைக்கு அடுத்துள்ள கட்டிடத்தில் பிறக்கும் குழந்தைகள் இறுதியில் பேய்களாக சுற்றித்திரியும் என்ற மூடநம்பிக்கையால் கிராம மக்கள் பிரசவங்களுக்கு இந்த மருத்துவமனையை விரும்புவதில்லை. மாறாக 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முந்தைய மருத்துவமனை கட்டிடத்திற்குச் செல்கின்றனர்.

கல்லறைக்கு அருகில் உள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது என்பதால் மருத்துவமனை கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. குறைந்த படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான வார்டுகள் மற்றும் பிரிவுகள் கல்லறையை எதிர்நோக்கியே உள்ளன.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தீப் கோடே கூறுகையில், இந்த சுற்றுவட்டாரத்தில் சிறந்த வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையாக இருந்தாலும் குழந்தைகள் பிரசவத்திற்காக யாரும் இங்கு வருவதில்லை. 2 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட இந்த கட்டிடம் குறைந்தது 20 கிராமங்களுக்கு சேவை செய்யும் வகையில் கட்டப்பட்டு உள்ளது என்றார்.

பீதார் மாவட்ட சுகாதார அதிகாரி டாக்டர் ஞானேஷ்வர் நிட்கோட் கூறுகையில், புதிய மருத்துவமனையை அச்சமின்றி பயன்படுத்துமாறு கிராம மக்களை கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. இருப்பினும் காய்ச்சல், சளி மற்றும் பிற அடிப்படை நோய்களுக்காக வெளிநோயாளிகள் பிரிவுக்கு செல்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News