இந்தியா

பொதுமக்களுக்கு வந்த தபால்களை வீட்டில் மூட்டை கட்டி வைத்த ஊழியர் சஸ்பெண்டு

Published On 2023-12-12 05:20 GMT   |   Update On 2023-12-12 05:20 GMT
  • தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
  • பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத் மாவட்டம், சுபாஷ் நகர் தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வந்தவர் கார்த்திக்.

இவரது கட்டுப்பாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வந்த வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை. பான் கார்டு, டிரைவிங் லைசன்சு, வங்கி காசோலைகள் உள்ளிட்ட தபால்களை வழங்கவில்லை.

இது குறித்து வாடிக்கையாளர்கள் கார்த்திக்கிடம் கேட்டபோது உங்களுக்கு எதுவும் வரவில்லை. வந்தால் கண்டிப்பாக தருகிறேன் என அலட்சியமாக பதில் அளித்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கார்த்திக் மீது சந்தேகம் அடைந்து இது குறித்து தபால் நிலைய உதவி அஞ்சல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.

நேற்று காலை தபால் நிலையத்திற்கு வந்த கார்த்திக்கிடம் உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் தபால் நிலையத்தில் இருந்து எடுத்துச் சென்ற தபால்களை ஏன் முறையாக குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கவில்லை என விசாரணை நடத்தினார்.

அதற்கு கார்த்திக் தனக்கு ஒன்றும் தெரியாது என பதிலளித்தார். இதையடுத்து உதவி அஞ்சலக கண்காணிப்பாளர் கார்த்திக் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது பிளாஸ்டிக் கவர்களில் மூட்டையாக தபால்கள் கிடந்தது.

மூட்டைகளில் சுமார் 6 ஆயிரம் தபால்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மூட்டை கட்டி வைத்து இருந்தது தெரிய வந்தது. கார்த்திகை சஸ்பெண்டு செய்தனர்.

Tags:    

Similar News