இந்தியா

காவல் நிலைய வளாகத்தில் வெடித்து சிதறிய வெடிகுண்டால் பரபரப்பு

Published On 2022-10-08 10:36 GMT   |   Update On 2022-10-08 10:36 GMT
  • ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
  • குண்டு வெடிப்பில் கார்கள் பைக்குகள் மற்றும் போலீஸ் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்து 713 கிலோ எடையுள்ள வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் வெடிபொருட்களை போலீசார் அழித்துவிட்டனர். மீதமிருந்த 250 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து அதன் மீது கான்கிரீட் அமைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பைக்குகள் மற்றும் காவல் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக அப்போது பணியில் இருந்த போலீசார் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வெடிகுண்டு விபத்து காரணமாக போலீசாருக்கோ பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிபொருட்களை மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

சமூக விரோதிகள் யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News