தனிநபர் வருமானத்தில் முதலிடம் பிடித்த கர்நாடகா: அப்போ தமிழ்நாடு எத்தனையாவது இடம்...
- மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.
- நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் பீகார் எம்.பி.க்கள் 2 பேர் நாட்டின் தனிநபர் வருமான விவரங்களை கேள்விகளாக கேட்டு இருந்தனர். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2024-2025-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014-2015-ம் ஆண்டுக்கான நிலையான விலையில் இது ரூ.72,805 ஆக இருந்தது.
தனிநபர் வருமானம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் மாறுபடும். இது பொருளாதார வளர்ச்சியின் நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகளில் உள்ள வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மாநிலங்கள் வாரியான தனிநபர் வருமான விவரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.
இதன்படி நாட்டில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. அங்கு 2024-2025-ம் ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2,04,605 ஆக இருந்தது.
2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.1,96,309 ஆகும்.இதற்கு அடுத்த இடங்களில் அரியானா (ரூ.1,94,285), தெலுங்கானா (ரூ.1,87,912), மகாராஷ்டிரா (ரூ.1,76,678), இமாச்சல பிரதேசம் (ரூ.1,63,465) ஆகிய மாநிலங்கள் உள்ளன.