இந்தியா

பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட 'Surgical Mop..' மகப்பேறு அறுவை சிகிச்சையில் விபரீதம்

Published On 2025-02-24 06:52 IST   |   Update On 2025-02-24 06:52:00 IST
  • வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
  • பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம்  வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

Tags:    

Similar News