இந்தியா

மத வழிப்பாட்டுத் தலங்கள் சட்டதை எதிர்த்து குவிந்த மனுக்கள்.. போதும் போதும் என சலித்த சுப்ரீம் கோர்ட்

Published On 2025-02-17 18:10 IST   |   Update On 2025-02-17 18:10:00 IST
  • ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை மற்றொரு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றுவதைத் தடை செய்கிறது.
  • மனுக்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு வரம்பு உள்ளது

1991 இல் இயற்றப்பட்ட மத வழிபட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு மனுத்தாக்கல் செய்யப்படுவது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையில் எந்த மாற்றத்தையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது மற்றும் ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றபோது இருந்த அதே மதத் தன்மையில் அவற்றைப் பாதுகாக்கவும் வழிவகை செய்கிறது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 3, ஒரு மதத்தின் வழிபாட்டுத் தலத்தை மற்றொரு மதத்தின் வழிபாட்டுத் தலமாக மாற்றுவதைத் தடை செய்கிறது.

இந்நிலையில் இதை எதிர்த்து இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் தொடந்து மனுத் தாக்கல் செய்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு ஒரு மனு இன்று(திங்கள்கிழமை) தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய சஞ்சீவ் கண்ணா, "போதும் போதும். இது முடிவுக்கு வர வேண்டும். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் எந்த புதிய மனுவையும் விசாரிக்காது" என்று மனுதாரரின் வழக்கறிஞரிடம் காட்டமாக தெரிவித்தார்.

"இது மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு. ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் இதைப் பட்டியலிடுங்கள். மனுக்கள் தாக்கல் செய்வதற்கு ஒரு வரம்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News