இந்தியா

பிரதமர் மோடியுடன் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க தயார்: சித்தராமையா சவால்

Published On 2023-05-01 10:02 IST   |   Update On 2023-05-01 10:02:00 IST
  • பிரதமரின் மன் கீ பாத் இல்லை, அது ஜன் கீ பாத்.
  • அரசியலில் நிரந்தரமாக இருப்பேன்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கும் பிரதமர் மோடி, சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறி ஓட்டு கேட்கிறார்கள் என்று மறைமுகமாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை விமர்சித்து பேசி இருந்தார். ஏனெனில் வருணா தொகுதியில் போட்டியிடும் அவர், இது தனது கடைசி தேர்தல் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார்.

இதுபற்றி தான் பிரதமர் மோடி மறைமுகமாக கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து சித்தராமையா டுவிட்டர் மூலமாக பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். ராகுல்காந்தியுடன் பாரத் ஜோடா யாத்திரையில் சித்தராமையா ஓடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் சித்தராமையா கூறி இருப்பதாவது:-

நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது, தேர்தல் அரசியலில் இருந்து மட்டும் தான். அரசியலில் நிரந்தரமாக இருப்பேன். ஆரோக்கியமாகவும் உள்ளேன். பிரதமர் மோடியுடன் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடுவதற்கும் தயாராக இருக்கிறேன். எடியூரப்பாவை வயது காரணம் காட்டி முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கினார்கள்.

தற்போது எடியூரப்பாவுக்கு வயதாகி இருந்தாலும், அவரை முன்னிலைப்படுத்தியே பா.ஜனதா பிரசாரம் செய்கிறது. இது எடியூரப்பா மீது இருக்கும் கவுரவமா?, அல்லது அனுதாபமா?. பிரதமரின் மன் கீ பாத் இல்லை, அது ஜன் கீ பாத்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News