கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும்: சரத்பவார் கணிப்பு
- கர்நாடகாவில் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.
மும்பை :
கர்நாடகாவில் வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். நாம் கேரளாவில் இருந்து தொடங்குவோம்.
கேரளாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறதா? தமிழ்நாட்டில்? கர்நாடகாவை பற்றி தற்போது சொல்லி இருக்கிறேன். தெலுங்கானாவில் பா.ஜனதா இருக்கிறதா? ஆந்திராவில்? ஏக்நாத் ஷிண்டேவின் புத்திசாலித்தனத்தால் அவர்களால் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது.
மத்தியபிரதேசத்தில் கமல்நாத் முதல்-மந்திரியாக இருந்தபோது சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டதால் அங்கு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.
ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பா.ஜனதா அல்லாத அரசு தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.