மத்திய அமைப்புகளிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் - தலைமை நீதிபதி சூர்யகாந்த்-திடம் நேரடியாக சொன்ன மம்தா
- கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
- நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்
மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும் பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் இடம் நேருக்கு பேர் மம்தா பானர்ஜி இந்த வேண்டுகோளை விடுத்தார்.
மேடையில் பேசிய அவர், "மத்திய ஏஜென்சிகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஜனநாயகத்தைச் சீர்குலைக்கின்றன.
அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளின் தேவையற்ற தலையீடுகளில் இருந்து சாதாரண மக்களையும், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் தயவுசெய்து காப்பாற்றுங்கள்.
நீதித்துறை மட்டுமே எங்களின் கடைசி நம்பிக்கை, எனவே அரசியலமைப்பைப் பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்." என்று தெரிவித்தார்.
சமீபத்தில் கொல்கத்தாவில் உள்ள ஐ-பாக் தேர்தல் வியூக அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, மம்தா பானர்ஜி நேரில் சென்று அந்தச் சோதனையைத் தடுத்ததாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் மம்தா பானர்ஜி மற்றும் டிஜிபி ராஜீவ் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.