தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத கட்சி: அகிலேஷ் யாதவ் கிண்டல்- அமித் ஷா பதிலடி
- உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என அழைத்துக் கொள்கிறது.
- ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது- அகிலேஷ்.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது சமாஜ்வாடி கட்சி தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் பேசும்போது "பாஜக கட்சி உலகிலேயே நாங்கள்தான் மிகப்பெரிய கட்சி என தாங்களாகவே கொள்கிறது. ஆனால், இதுவரை தேசிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் உள்ளது" என கிண்டல் செய்யும் வகையில் கூறினார்.
அதற்கு பதில் அளித்த அமித் ஷா "இங்கு என் முன் அமர்ந்துள்ள அனைத்து கட்சிகளிலும், அவர்களுடைய தேசிய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
நாங்கள் நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து, 12 முதல் 13 கோடி உறுப்பினர்களிடமிருந்து தேர்வு செய்வோம். இதனால் கொஞ்சம் நேரம் பிடிக்கும். உங்களுடைய முறையில் அதிக நேரம் எடுக்காது. நீங்கள் இன்னும் 25 வருடத்திற்கு தலைவராக இருப்பீர்கள் எனச் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். பாஜக கட்சி விதிப்படி பாஜக தலைவர், அரசு பதவியில் இருக்கக் கூடாது. இதனால் விரைவாில் பாஜக புதிய தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.