இந்தியா

அமர்நாத் யாத்திரையால் சாதுக்கள் உற்சாகம்... பயங்கரவாத அச்சுறுத்தல் ஒரு பிரச்சனையே அல்ல

Published On 2022-06-26 07:57 GMT   |   Update On 2022-06-26 07:57 GMT
  • அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

ஜம்மு:

தெற்கு காஷ்மீரில் பனிபடர்ந்த இமயமலையின் உச்சியில் அமர்நாத் குகைக்கோவில் உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாகவே தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் புனிதப்பயணம் செய்வார்கள். கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரத்தில் உள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அமர்நாத் குகைக்கோயிலுக்கு பக்தர்கள் வாகனங்களில் செல்ல முடியாது. ஜம்முவிலிருந்து பாகல்காம் அல்லது பல்டால் அடிவார முகாம் வரை வாகனங்களில் சென்று அங்கிருந்து குகைக்கோயிலுக்கு நடைப்பயணமாக தான் செல்ல முடியும். பல்டால் வழியாக செல்லும் பாதை 14 கிமீ நீளம் கொண்ட குறுகிய பாதை ஆகும். பாகல்காம் வழியாக செல்லும் பாரம்பரிய வழி 48 கிமீ நீளம் கொண்டது.

இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு இம்மாதம் 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டு யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் சாதுக்கள் மற்றும் யாத்ரீகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் மற்றும் பக்தர்கள் ஜம்முவுக்கு வரத் தொடங்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பழைய நகரின் பூரணி மண்டி பகுதியில் உள்ள அடிவார முகாம் ராம் மந்திரில் முகாமிட்டு, யாத்திரைக்கான நாளை எதிர்பார்த்துள்ளனர்.

யாத்திரை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜம்முவில் உள்ள பகவதி நகர் மற்றும் ராம் மந்திரில் இருந்து அடிவார முகாம்களுக்கு சாதுக்கள் உட்பட யாத்ரீகர்களின் முதல் குழு புறப்படுகிறது.




அமர்நாத் யாத்திரைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது. பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கவும், அமைதியான யாத்திரையை உறுதி செய்யவும், அடிப்படை முகாம்களிலும், ஜம்மு காஷ்மீருக்கான நுழைவாயிலான லகான்பூரிலிருந்து குகைக் கோவிலுக்குச் செல்லும் பாதையிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்முவில் உள்ள கோவில் வளாகத்தில் உள்ள பெரிய மண்டபத்தில் சிறு குழுக்களாகத் தங்கியிருக்கும் சாதுக்கள், சிவபெருமானைப் போற்றி பாடியவண்ணம் உள்ளனர். அப்போது, உலக வாழ்க்கையைத் துறந்த சாதுக்கள், பயங்கரவாத அச்சுறுத்தலைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்றும், இது தங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல என்றும் கூறுகின்றனர்.

எங்களுக்கு தர்மம் (மதம்) மட்டுமே தெரியும். எங்கள் தர்மம் அனைவரையும் நேசிக்க கற்றுக்கொடுக்கிறது. நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திப்பதற்காக புனித பயணத்தில் இருக்கிறோம், அதைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறோம், வேறு எதுவும் இல்லை என அசாமிலிருந்து வந்திருக்கும் சாது ஒருவர் கூறினார்.

Tags:    

Similar News