இந்தியா

ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப நின்ற வாகனத்தை உடைத்து ரூ.50 லட்சம் கொள்ளை

Published On 2024-03-28 05:04 GMT   |   Update On 2024-03-28 05:04 GMT
  • ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.
  • பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் காசர்கோடு உப்பளம் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் செயல்பட்டு வரும் இந்த ஏ.டி.எம். மையத்தில் தனியார் ஏஜென்சி மூலமாக பணம் நிரப்பப்படும்.

அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில், அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக ஒரு வாகனம் வந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் ரூ.1 கோடி பணம் கொண்டு சென்றுள்ளனர். ஒரு மூட்டையில் தலா ரூ.50 லட்சம் வீதம் இரு மூட்டைகளில் ரூ.1 கோடி பணம் வைத்திருந்தனர்.

அதில் ரூ.20 லட்சம் பணத்தை ஏ.டி.எம்.-ல் நிரப்புவதற்காக ஒரு மூட்டையை மட்டும் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் எடுத்துச்சென்றுள்ளனர். வாகனத்தில் பின்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால், வாகனத்தின் அருகில் யாரும் நிறுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர், பணம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் பக்கவாட்டு பகுதி கண்ணாடியை உடைத்து, வாகனத்துக்குள் இருந்த பண மூட்டையை எடுத்து விட்டு தப்பியது. இதனை ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பிப் கொண்டிருந்த தனியார் ஏஜென்சி ஊழியர்கள் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்பிவிட்டு திரும்பி வந்தபோது தான், வாகன கண்ணாடி உடைந்து கிடந்ததை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வாகனத்தை சோதனை செய்தபோது, ஒரு மூட்டையில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து மஞ்சேஷ்வர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

வாகனத்தில் லட்சக்கணக்கில் பணம் இருக்கும்போது, பாதுகாப்புக்கு ஊழியர்கள் நிற்காமல் சென்றிருப்பது ஏன் என்பது தெரியவில்லை. மேலும் வாகனத்தின் கண்ணாடியை கொள்ளையர்கள் உடைக்கும்போது சத்தம் யாருக்கும் கேட்காதது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.

இதனால் கொள்ளை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்த வாகன டிரைவர், பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தனியார் ஏஜென்சி ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வேன் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் இருந்த பணம் பாதுகாப்பாக மாற்று வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. பட்டப்பகலில் வாகன கண்ணாடியை தைரியமாக உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு நபரோ அல்லது இரண்டு நபர்கள் மட்டுமே ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஆகவே கொள்ளையர்களை கண்டுபிடிக்க சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். ஆனால் சாலை பணி நடப்பதன் காரணமாக சம்பவ இடத்தில் இருக்கும் பல சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்படாமல் இருந்துள்ளது.

இதனால் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அடை யாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முழுக்க முழுக்க தனியார் ஏஜென்சி ஊழியர்களின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News