இந்தியா

ரூ.300 கோடி மோசடி.. 162 வெளிநாட்டுப் பயணங்கள் - உ.பியை உலுக்கிய போலி தூதரகம் பின்னணி

Published On 2025-07-27 17:14 IST   |   Update On 2025-07-27 17:14:00 IST
  • இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.
  • இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தி, சுமார் 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்ஷ்வர்தன் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

இவரிடமிருந்து போலி தூதரக நம்பர் பிளேட் கொண்ட கார்கள், போலி ஆவணங்கள், ஆடம்பர கடிகாரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயின், காசியாபாத்தில் வாடகை வீட்டில் 'வெஸ்ட் ஆர்டிகா' என்ற அங்கீகரிக்கப்படாத நாட்டின் போலி தூதரகத்தை நடத்தி வந்துள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளார்.

ஜெயின் வேலை மோசடிகளிலும், ஹவாலா மூலம் பணமோசடியிலும் ஈடுபட்டுள்ளது உ.பி. சிறப்பு அதிரடிப் படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவருக்கு சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசுவாமி மற்றும் சவுதி ஆயுத வியாபாரி அட்னான் காஷோகி ஆகியோருடன் தொடர்பு இருந்துள்ளது.

சந்திராசுவாமிதான் ஜெயினை மோசடிக்காரர் அஹ்சன் அலி சையதுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சையது, ஜெயினுடன் இணைந்து 25 போலி நிறுவனங்களைதொடங்கி சுமார் 300 கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சையது ஏற்கனவே லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயின் ஒரு கெளரவ தூதர் மட்டுமே என்றும், அவர் போலி இராஜதந்திர அடையாளங்களைப் பயன்படுத்தியது தங்கள் நெறிமுறைகளை மீறிய செயல் என்றும் வெஸ்டார்டிகா அறிவித்துள்ளது. மேலும், ஜெயினை தனது அமைப்பின் பிரதிநிதி பதவியிலிருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்துள்ளது.

ஜெயின் 10 ஆண்டுகளில் 162 வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார் மற்றும் வெளிநாடுகளில் பல வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவல்துறை நாளை நீதிமன்றத்தில் ஜெயினை காவலில் எடுத்து மேலும் விசாரிக்க உள்ளது. 

Tags:    

Similar News