இந்தியா

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு- 7,436 கன அடியாக குறைப்பு

Published On 2023-09-03 06:07 GMT   |   Update On 2023-09-03 06:07 GMT
  • 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
  • கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது

அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

Tags:    

Similar News