இந்தியா

அடுத்தமுறை ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: தேஜஸ்வி யாதவ் கருத்தை ஏற்குமா இந்தியா கூட்டணி?

Published On 2025-08-19 17:04 IST   |   Update On 2025-08-19 17:04:00 IST
  • பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் உரிமை என்ற பெயரில் ராகுல் காந்தி பேரணி.
  • ராகுல் காந்தி பேரணியில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.

பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகாளர்கள் பெயரை நீக்கிவிட்டது.

இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி "வாக்காளர்கள் உரிமை" என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் கலந்து கொண்டார்.

அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "அடுத்த முறை, நாம் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். எதிர்க்கட்சிகள் இதற்காக பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார். இது, 2029 தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் (இந்தியா கூட்டணி) பிரதமர் வேட்பாளராக பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறிய நிலையில், மற்ற தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மோடியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லியார்ஜூன கார்கே செயல்பட்டார். இந்த கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தேர்தல் சந்தித்தது.

திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விரும்பவில்லை. கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என பரிந்துரை செய்தன. இதற்கு முக்கிய காரணம் 2019 தேர்தலில் காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பிடித்தது.

மம்தா, கெஜ்ரிவால் பரிந்துரையை கார்கே ஏற்கவில்லை. இதனால் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தது.

இந்த நிலையில்தான் தேஜஸ்வி யாதவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை 2029 தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags:    

Similar News